திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சங்கன்செட்டி வலசு கிராமத்தில் வசித்துவருபவர் கருப்புசாமி. பொறியியல் படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஹட்சன் டைரி என்ற தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றிவந்தார். இந்நிலையில் நேற்று (மே 26) நிறுவன பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கருப்புசாமி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பழனியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, கருப்புசாமி உயிரிழந்து பிணவறையில் உடல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கருப்புசாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கருப்புசாமி உயிரிழந்தது குறித்து நிறுவனத்தின் தரப்பில் இருந்து எதுவுமே தெரிவிக்கவில்லை என்றும், மின்தூக்கியிலிருந்து கீழே விழுந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறினர்.
இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு பிறகு இதுவரையிலும் நிர்வாகம் தரப்பில் என்ன நடந்தது என்றும், சிசிடிவி காட்சிகளை காட்டவும் மறுப்பதாகவும், நிறுவனத்தில் இருந்து இதுவரை யாரும் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே உரிய விசாரணை செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள் இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹட்சன் டைரி நிறுவனத்தின் மேலாளரை வரவழைத்து தங்களது சந்தேகங்களை தீர்ப்பதாகவும், அதன்பிறகு உடற்கூறாய்வு நடத்துவதாகவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பழனி-திண்டுக்கல் சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.