திண்டுக்கல்:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்யும் போது காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மலையடிவாரம் பாதவிநாயகர் கோயில் முதல் மலைகோயில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பக்தர்களால் செலுத்திய காணிக்கை நிறையும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். தற்போது தைப்பூசத்திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில், உண்டியல்கள் நிறைந்தன. அதைத் தொடர்ந்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.