திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி போஸ்ட் ஆபிஸ் தெருவில் வசிப்பவர் தர்மராஜ் (65), இவரது மனைவி காளியம்மாள் (54). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. தர்மராஜ் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் சலூன் கடை நடத்திவந்தார். இதன் மூலம் கிடைக்கும் வருமானமே இவர்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தர்மராஜ் சலூன் கடையை திறக்க முடியாமல் வறுமையில் இருந்துள்ளார். பின்னர் ஊரடங்கு தளர்வுகள் ஏற்பட்டு, கடை திறக்க அனுமதி வழங்கப்பட்ட பின்னரும், கண் பார்வை சரியாக தெரியாததால் சலூன் கடையை நிரந்தரமாக மூடியுள்ளார். இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலையில் இவர்கள் அல்லல்பட்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து வறுமை வாட்டியதாலும், உறவினர்களின் ஆதரவு இல்லாததாலும் மனம் உடைந்துபோன தம்பதியினர் வீட்டிலேயே பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.