திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை, தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய பிரபலமான காய்கறி சந்தைகளுள் ஒன்றாகும். இங்கு காந்தி காய்கறி சந்தை மற்றும் காமராஜர் காய்கறி சந்தை, தற்காலிக சந்தைகள் என நான்கு இடங்களில் காய்கறி சந்தைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்தி காய்கறி சந்தையில், கடை உரிமையாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து, அந்தக் கடைக்கு மட்டும் சீல் வைத்து, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, நேற்று முன்தினம் (ஜூலை 13) திடீரென மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி காய்கறி சந்தைகளில் ஆய்வுமேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், காய்கறி சந்தை நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இனி ஒரு நபருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானாலும் சந்தைகள் மூடப்படும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், நேற்று (ஜூலை 14) காந்தி காய்கறி சந்தையில் தொழிலாளி மற்றும் கடை உரிமையாளர் என இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது.