தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சம்பவமே நடைபெறவில்லை: பழனி பாலியல் வன்முறை விவகாரத்தில் புதிய திருப்பம்! - திண்டுக்கல் மாவட்டம்

பழனி விடுதியில் கேரள பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகப் புகார் எழுந்த நிலையில், குறிப்பிட்ட தங்கும் விடுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி, பழனி பாலியல் வன்முறை விவகாரம், பழனி பாலியல் வன்முறை, Kerala woman sexual assault case in palani
பழனி பாலியல் வன்முறை

By

Published : Jul 13, 2021, 9:32 PM IST

திண்டுக்கல்:பழனியில் கேரள பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் புகார் அளித்த நபர் கூறிய தகவலும், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளுக்கும் முரணாக இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரன் தலைமையில் மொத்தம் ஒன்பது பேர் கொண்ட மூன்று தனிப்படையினர் கேரளாவிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், புகார் அளித்த தர்மராஜிடமும் விசாரணை செய்ய புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கின் முக்கியத் திருப்பமாக தங்கும் விடுதி உரிமையாளர் முத்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

விடுதியில் தகராறு

அன்றைய தினத்தில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்த முத்து, அம்மா, மகன் என்ற பெயரில் இருவர் வந்து, அங்கு அறை எடுத்து தங்கியதாகவும், மது போதையில் தகராறு செய்ததால் அவர்களை அறையைவிட்டு வெளியேற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில நாள்களுக்கு முன்பு தன்னை செல்போனில் தொடர்புகொண்டு கேரள காவல் துறை எனக்கூறி பெண்ணொருவர் தங்கள் மீது புகார் அளித்துள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டும் வகையில் பேசியதாகவும் தங்கும் விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கேரள பெண் பலாத்கார வழக்கு பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில் தங்கும் விடுதி உரிமையாளர் பணம் கேட்டு மிரட்டியதாகத் தெரிவித்துள்ளது இந்த வழக்கில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலுக்கும் சந்தேகம்

இது குறித்து, திண்டுக்கல் காவல் துறை சரகத் தலைவர் விஜயகுமாரி இன்று (ஜூலை 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜூன் 19ஆம் தேதி தர்மராஜ், தங்கம்மாள் ஆகிய இருவரும் பழனியில் தங்கியிருந்த விடுதியில் மதுபோதையில் தகராறு செய்ததால் விடுதி உரிமையாளர் அவர்களை வெளியேற்றியுள்ளார்.

திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி செய்தியாளர் சந்திப்பு

அதன்பிறகு, ஜூன் 25ஆம் தேதிவரை இருவரும் பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சர்வசாதாரணமாக உலா வந்ததற்கான சிசிடிவி காணொலி ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

தர்மராஜ் பணம் பறிக்கும் நோக்கத்தில் கேரள காவல் துறையின் பெயரைப் பயன்படுத்தி விடுதி உரிமையாளரை மிரட்டியதும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட தங்கும் விடுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணவன் - மனைவி இல்லை

மேலும், தர்மராஜின் சகோதரியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தங்கம்மாள், தர்மராஜ் ஆகிய இருவரும் கணவன், மனைவி அல்ல என்ற உண்மையும் தெரியவந்துள்ளது. கேரளா காவல் துறை அளித்துள்ள மருத்துவ அறிக்கையில், தங்கம்மாளுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான எவ்வித உடல் காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தவழக்கு தொடர்பாக விசாரணை செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பில் திண்டுக்கல் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான மூன்று தனிப்படை கேரளாவிற்கு விரைந்துள்ளது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் 164 பிரிவின்கீழ் கேரள காவல் துறையினர் நடத்திய ரகசிய விசாரணை குறித்த ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களைத் தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்" என்றார்.

இதையும் படிங்க: 'முழுக்க முழுக்க அரசியல் நாடகம்' - நீட் தேர்வு பாதிப்பை ஆராயும் குழுவை விமர்சித்த கரு. நாகராஜன்

ABOUT THE AUTHOR

...view details