திண்டுக்கல் மாவட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பேசுகையில், ”தமிழ்நாடு முழுவதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 720 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். அதனடிப்படையில், ஏற்பாடு செய்யப்பட்டதே இன்றைய சிறப்பு முகாம். இதன் மூலம் பொதுமக்கள் தங்களைப் பரிசோதிக்கலாம். மருத்துவரின் ஆலோசனைகளை இலவசமாகப் பெறலாம்.
குறிப்பாக, நோய்க்கு ஏற்ப சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படும். இந்த சிறப்பு முகாமின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஒரே இடத்தில் இலவசமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளலாம். இந்த மருத்துவ முகாமைப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து பொதுமக்களும் பயன்பெற வேண்டும். மருத்துவத் துறையில் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. சென்னை போன்ற நகரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்துகூட சிகிச்சைக்காக வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அடுத்து தமிழ்நாடு சிறந்த மருத்துவ வசதியளிக்கும் மாநிலமாகத் திகழ்கிறது” என்றார்