அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாட்டு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதியஅரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தற்போது கூடுதலாக கிருஷ்ணகிரி, திருவள்ளுர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது வரலாற்று சாதனையாகும். இதற்கென 2,925 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி அதில் 1,755 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பங்காக 1,170 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதனால் தான் வெளிநாடுகளில் இருந்துகூட சிகிச்சைக்காக ஏராளமானோர் சென்னைக்கும் மற்ற நகரங்களுக்கும் வருகின்றனர். மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற தொலைநோக்குத் திட்டத்தோடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டார். ஜெயலலிதாவின் அந்த லட்சியக் கனவை முதலமைச்சர் எடப்பாடி நிறைவேற்றி வருகிறார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைவதற்கு திண்டுக்கல் அடியனூத்து கிராமத்தில் 8.61.0 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அந்தப் பகுதியில் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.