திண்டுக்கல்:பழனி உட்கோட்ட அளவில் பணிபுரியும் காவல்துறையினரின் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பழனி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில், துணை சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பேசுகையில், “தங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளிடம் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு, யோகா என அனைத்திலும் சிறந்து விளங்கிட போதிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் இணைய குற்றங்கள் தொடர்பாக குழந்தைளுக்கு போதிய விழிப்புணர்வு செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
தொடர்ந்து காவலர்கள் மற்றும் அவர்களின் குடுபத்தினரிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். அப்போது காவல்துறையினர் ஒருவரின் மகள், “பொதுமக்களை ஹெல்மெட் அணிய அறிவுறுத்தும் காவல்துறையினரும், ஹெல்மெட் அணிய உறுதிப்படுத்த வேண்டும். என் அப்பாவும் ஹெல்மெட் அணியாமல்தான் செல்கிறார்” என குற்றம் சாட்டினார்.
‘என் போலீஸ் அப்பாவும் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்’ டிஎஸ்பியிடம் புகார் அளித்த காவலரின் மகள்! இதற்கு போலீஸ் சூப்பிரண்டு, “காவல்துறையினர் மக்களுக்கு முன்மாதிரியாக சாலை விதிகளை பின்பற்றி, ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவலர்களின் குழந்தைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகளின் பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையும் படிங்க:சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1.36 கோடி அபராதம்!