திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தங்கச்சியம்மாபட்டியில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் தொழிலைச் செய்துவருகிறார். இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.
நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தச் சென்றவர், நீண்ட நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத சூழலில் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் கருப்பசாமியைத் தேடி ஊர் முழுக்க அலைந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை, அவரது இருசக்கர வாகனம் பழுதுநீக்கம் கடையினுள்ளே கருப்பசாமி இறந்து கிடப்பதாகத் தகவல் பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அவரது குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, தலையில் பாராங்கல் போட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையின் அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அம்பிளிக்கை காவல்நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு இறந்தவரின் உடலைக் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முற்பட்டனர். இதன்போது காவல் துறையினருக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது.