திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியில் தேவசகாயம் என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கல்லாவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து பூட்டிக்கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட திருடர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைத்திருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.
அதிகாலையில் கடையை திறக்க வந்தபோது பணம் திருடு போனதை கண்டு தேவசகாயம் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.