திண்டுக்கல்:அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் செல்போனில் கருவறையை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கருவறையில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவா் சிலை, தங்கக் கோபுரம், தங்கத்தோ், தங்க மயில் ஆகியவற்றை திருவிழாக் காலங்களில் சிலா் கைப்பேசியில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனா். மலைக்கோயிலில் புகைப்படம் எடுக்கக் கூடாது என பல இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருந்தாலும், பக்தா்கள் அவற்றை பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பலரும் மூலவரைப் படமெடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியது.
இந்த நிலையில், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செல்போன் கொண்டு வருவதற்கான தடையை அமல்படுத்த வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் இன்று அக்டோபர் 1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை என்பது அமலுக்கு வந்துள்ளது.