திண்டுக்கல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் சர்ச்சை திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெல்லனம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று(ஜன.11) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் பங்கேற்று பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிழோவும், ஒரு கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது எம்எல்ஏ பேசியபோது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவரது செல்போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
இதனை கவனித்த எம்.எல்.ஏ காந்திராஜன், "இந்தாம்மா செல்லு, நான் வேனா அப்புறமா வந்து பேசிக்க வா, நீங்க சாவகாசமா உங்க சொந்த பந்தங்கள் கிட்ட பேசிட்டு சொல்லுங்க. அப்புறம் நாங்க உங்க கிட்ட பேசுறோம். ஏம்மா இந்த அக்கிரமம் பண்றீங்க. செல்போன் இல்லாத காலத்தில் என்ன பண்ணுனீங்க?. பொது இடத்துக்கு வந்தால் மரியாதையாக இருக்க வேண்டும். சுய கட்டுப்பாடு இருக்கணும். பிரைம் மினிஸ்டர் மோடியா உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி அவசரப்பட்டு பேசுவதற்கு. உங்கள் சொந்தக்காரர்கள் தான் பேசப் போகிறார்கள். பிறகு போய் பேசலாமே" என்று நகைச்சுவையுடன் கண்டித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ காந்திராஜன், "நேற்று நான் சென்னையில் தான் இருந்தேன். அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி ஆகியோருடன் முதலமைச்சரை சந்தித்தோம். அப்போது பொங்கல் பரிசு தொகையை அனைவருக்கும் வழங்கினால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினோம். மேலும் பொங்கல் பரிசு என்பது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். உரிமையோடு இந்த அரசாங்கத்தை நம்பி வரலாம். அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் இந்தப் பொங்கல் பரிசு போய் சேர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியதையடுத்து, முதலமைச்சர் உடனடியாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்க உத்தரவிட்டார்" என்று பேசியது பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வெள்ளத்தின் போது சிறப்பாக செயல்படவில்லை என்றும் மேலும் பல்வேறு விஷயங்களில் நிர்வாக திறனின்றி செயல்படுகிறார் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்ற நிலையில் தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் அமைச்சர்கள் அனைவரும் கூறியதன் அடிப்படையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் பெறவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு இதோ!