திண்டுக்கல் சிறுமலையில் காட்டெருமை, மான், செந்நாய் ,கேளை ஆடு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் அரியவகை தாவரங்கள் உள்ளன. இந்த உயிரினங்கள் அழிவதைத் தடுக்க ரூ5 கோடி செலவில் பல்லுயிர் பூங்கா சிறுமலை பழப்பண்ணை அருகே 120 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மூங்கில் பூங்கா, ஆடிட்டோரியம், பட்டாம்பூச்சி பூங்கா, சிறுவர் பூங்கா போன்றவையும் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் பல்லுயிர் பூங்கா அமையவுள்ள இடத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வனப்பகுதிகளில் இருந்து முன்பு ஒரு காலத்தில் மரம் எடுத்து சென்றது உண்மைதான். ஆனால் நான் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திண்டுக்கல் கொடைக்கானல், தாண்டிக்குடி மற்றும் தமிழ்நாடு எங்கும் உள்ள வனப்பகுதிகளில் மரக் கடத்தல் கிடையாது.
தற்போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இல்லாமல் பட்டா நிலங்களில் மரம் எடுக்க முடியாது. அதேபோல வனத்துறையை பொறுத்தவரை தவறு செய்யாத அதிகாரிகள் மட்டும்தான் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.