திண்டுக்கல்: சின்னாளபட்டியில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம், சாயப்பட்டறைகள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்காக அமைச்சர் பெரியசாமி நேற்று (ஜூலை.18) ஆய்வு மேற்கொண்டார்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சின்னாளபட்டியில் குடிசைத் தொழிலாக தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் மிகவும் சிறப்பு பெற்றவை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படுகின்றன.
திட்டம் கிடப்பில் போடப்பட்டது
சின்னாளபட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுங்குடி சேலை மற்றும் சாயத் தொழிலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும், ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சட்டப்பேரவையில் நான் பேசியபோது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது.
நிரந்தர தீர்வு காண கோரிக்கை
சாயத்தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.