ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி திண்டுக்கல்: உணவுப்பொருட்கள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின மாநில அளவிலான விழா இன்று (செ.7) நடைபெற்றது. இந்த விழாவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள், மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம், ரொக்கப் பரிசு ஆகியவற்றை வழங்கினர்.
நியாய விலைக்கடைகளில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2,182 பயனாளிகளுக்கு 14 கோடியே 57 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “மக்களுக்குத் தேவையான உணவு, கல்வி போன்ற திட்டங்களைக் கொண்டு சேர்ப்பது குறித்து முதலமைச்சர் பயணம் இருக்கிறது. 24 மணி நேரமும் மக்களைப் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறார். முதலமைச்சரின் சிறப்பான பயணம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அதனை எதுவும் தடுக்க முடியாது. எவ்வளவு பெரிய சக்தி வந்தாலும், அரசு மக்களுக்கு கொண்டு செல்லக்கூடிய திட்டங்களைத் தடுக்க முடியாது.
இந்த நாட்டில் 120 கோடி மக்களில் சாதாரண குடிமகனாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் அனைவரும் சட்டத்திற்கு முன் சமம். யார் வேண்டுமானாலும் பேசலாம், சுதந்திரமாக பேசுவதற்கு உரிமை உள்ளது. கருத்து சுதந்திரம் இருக்கக் கூடிய கட்சி ஒன்று இருக்கிறது என்றால், அது திமுகதான். எங்களைப் பொறுத்தவரை, கொள்கை லட்சியத்தில் உறுதியாக உள்ளோம். எல்லா சாதியும், எல்லா மதமும் ஒற்றுமையாக வாழ்கிறோம்.
எந்த கலவரமும் தமிழ்நாட்டில் வராது. இந்தியாவில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும். சட்டம், ஒழுங்கு எல்லோருக்கும் சமமாக பங்கிடப்படும். சாமியார் எதுக்கு கருத்து சொன்னார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தாய்மாருக்கு இன்னும் ஏழு நாட்களில் மாத உதவித்தொகை ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது. முதலமைச்சர் சொன்ன வாக்குறுதிகள் நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:உதயநிதிக்கு எதிராக யூடியூபர் மனீஷ் காஷ்யப் தாயார் குடியரசுத் தலைவருக்கு கடிதம்!