திண்டுக்கல் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில், கூட்டுறவுத் துறை வாயிலாக நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ.500 மதிப்பில் 19 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யும் பணியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில், வனத்துறை அமைச்சர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.1000 வீதம் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 லட்சத்து 26 ஆயிரத்து 98 குடும்ப அட்டைதாரர்களில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 900 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு விரைந்து நிவாரணத் தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் பொருட்டு வெளியில் அதிகளவில் மக்கள் வருவதால் கரோனா நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதனை கருத்தில்கொண்டு கூட்டுறவுத் துறை வாயிலாக நகரும் பண்ணை பசுமை கடைகள் மூலம் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் சில்லறையாகவும், தொகுப்பாகவும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மளிகைப் பொருள்கள் தட்டுப்பாடு, விலை ஏற்றம் ஏற்படும் காரணத்தினால் வருமானம் இழந்து தவிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக கூட்டுறவுத் துறை வாயிலாக ரூ.500 மதிப்பில் 19 மளிகை பொருள்களின் தொகுப்பு பைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
பொதுமக்களுக்கு தொகுப்பு பொருள்களை வழங்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் எட்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை பொருள்கள் தொகுப்பினையும், கரோனா நோய்த் தொற்றை அழிக்க அயராது பாடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்டவைகளையும் அவர் வழங்கினார்.
இதையும் படிங்க:நாங்கள் மக்களுடன் இருந்து பால்கனியை பார்க்கிறோம் : கடம்பூர் ராஜூ கமலுக்கு பதிலடி