திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவினால் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வந்தனர். இதனால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 539, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 176 என குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 715 பேர் அவர்களுடைய சொந்த மாநிலமான ஜார்கண்ட், ஒடிசாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், குடிபெயர்ந்த தொழிலாளர்களை வழியனுப்பி வைக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் வந்தார். இது குறித்து அவர் கூறுகையில், "குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களது பயணத்திற்கான ரயில் டிக்கெட் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதில் அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, வருவாய் அலுவலர் கோவிந்தராசு, காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், மாவட்ட கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள குல்பி ஐஸ் கடையில் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர்(20), கிசான் லால்(36) இருவரும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், தொடர் ஊரடங்கு காரணமாக வேலை இன்றி தவித்து வந்த அவர்கள், சொந்த ஊர்களுக்கு எப்படி செல்வது என தெரியாமல் பழனியிலிருந்து நடந்து வந்தனர்.