திருவிழாக் காலங்களில் இளசுகளின் காதல் கதை தொடங்கி பொடுசுகளின் சாகசக் கதைகள் வரை சேமித்துக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை ராட்டினங்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் திருவிழாக்கள், அறிவியல் கண்காட்சிகள் உள்ளிட்டவற்றில் ராட்டினம் சுற்றும் பழக்கம் வாடிக்கை.
இப்படி, விழாக்களைக் கொண்டாட்டமாக இல்லாமல் வாழ்வாதாரமாகக் கொண்ட ராட்டின தொழிலாளர்களுக்கு கரோனா நெருக்கடி பேரிடியாக விழுந்தது. ராட்சத தோற்றத்தில் கண்டுவியந்த கொலம்பஸ், ஜெயிண்ட் வீல் உள்ளிட்ட ராட்டினங்கள் பழைய இரும்புப் பொருள்கள் போல குவிக்கப்பட்டிருக்கின்றன.
என் அனுபவத்தில் இதுபோன்ற தொழில் முடக்கம் இதுவே முதல்முறை என பேச்சைத் தொடக்குகிறார் ராட்டின தொழிலாளி முத்துச்சாமி, “30 வருடமாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். எனது தந்தை விவசாயத்தை நம்பியிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்தான் எங்களது பூர்வீகம். பொய்த்துப் போன பருவ மழை இன்னபிற நெருக்கடிகள் என விவசாயம் விடுத்து ராட்டினத் தொழிலுக்குள் வந்துவிட்டோம். தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ராட்டினம் ஓட்டிப் பிழைத்துக் கொண்டிருந்தோம்.
பொதுவாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி காலங்களில்தான் அதிகளவில் கோயில் திருவிழாக்கள், கண்காட்சி போன்றவை நடைபெறும். ஆனால், இந்தாண்டு கரோனா பெருந்தொற்று தாக்கத்தால் விழாக்கள் எதுவுமின்றி வீட்டில் முடங்கியுள்ளோம். எனது அனுபவத்தில் அதிகபட்சம் ஒரு மாதம் வேலையின்றி இருக்கும். மற்றபடி எல்லா மாதமும் ராட்டினங்களுடன் ராட்டினங்களாக நாங்களும் ஊர் மாற்றி ஊர் சுழன்று கொண்டிருந்தோம். ஆனால், இப்போது மூன்று மாதத்திற்கும் மேலாக வேலையின்றி போனதால் செய்வதறியாது தவிக்கிறோம்” என்றார்.