தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரியம்மன் கோயில் பூக்குழி விழா

திண்டுக்கல்: நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 15 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

15 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரியம்மன் கோயில் பூக்குழி விழா
15 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரியம்மன் கோயில் பூக்குழி விழா

By

Published : Mar 10, 2020, 8:46 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான மாசி பெருந்திருவிழா சிறப்புடையதாகும். இந்த விழாவானது கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகேயுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி, மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து விழாவில் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நேர்த்திக்கடனாக பக்தர்கள் பால், சந்தனம், தேன் குடங்களை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தினர். அன்று அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி வகையறாக்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், மாறுவேடமணிந்து வருதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. மேலும் மேளதாளம் முழங்க தாம்பளத்தில் அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக்கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கச் சென்றனர். முன்னதாக கோயில் முன்பாக கழுகு மரம் ஊன்றப்பட்டிருந்தது. பின்னர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், பூக்குழியில் ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். இதில் சிறுவர் முதல் முதியவர் வரையிலும், கைக்குழந்தைகளுடன் பெண்கள் உள்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

15 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரியம்மன் கோயில் பூக்குழி விழா

ABOUT THE AUTHOR

...view details