திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் சாலை தெருவைச் சேர்ந்தவர் ஜபாருல்லா. ஹோட்டல் கடை நடத்தி வரும் இவருக்கு மகள்கள் உள்ளனர்.
இவரின் மூத்த மகள் ஷகிலா பானுவுக்கும், இதே சாலை தெருவைச் சேர்ந்த ரபீக் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ரபீக் குடிபோதைக்கு அடிமையாதாகவும், நாள்தோறும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஷகிலா பானு தனது தந்தை வீட்டுக்கே மீண்டும் சென்று, பல ஆண்டுகளாக தந்தையின் அரவணைப்பிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (ஆக.08) காலை தனது மாமனார் வீட்டுக்கு குடிபோதையில் வந்த ரபீக், தன் மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.
இதில் இருவருக்குமிடையே தகராறு முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்ததோடு மட்டுமல்லாமல், தனது குழந்தைகள் என்று கூட பாராமல் அவர்களது கழுத்தையும் துணியால் ரபீக் நெருக்கியுள்ளார்.
இதில் ஷகிலா பானுவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரைக் காப்பாற்றி ரபீக்கை விரட்டியடித்தனர். இதில் கழுத்தில் காயமடைந்த ஷகிலா பானுவை அக்கம்பக்கத்திர் மீட்டு உடனடியாக வேடச்சந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து வேடச்சந்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தப்பி ஓடிய ரபீக்கை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:’போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்கும் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை’