சேலம்:சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நிறுத்தி இருந்த ஈச்சர் லாரியின் பின்புறம் ஆம்னி வேன் மோதியதில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பரிதாபமாக நேற்று (செப்.6) அதிகாலை உயிரிழந்தனர்.
தற்போது இந்த விபத்துக்கு காரணமான ஈச்சர் லாரியின் ஓட்டுநர் ஜெகன் பாபு (25) சங்ககிரி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் கூறுகையில், "விபத்தின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்ததில், விபத்துக்கு காரணமான நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த ஈச்சர் லாரி, கோவை நகரில் சென்று கொண்டிருந்ததை கண்டுபிடித்தோம்.
உடனடியாக கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்து அந்த லாரியை மடக்கி பிடித்தோம். பின்னர் அங்கு சென்ற நாங்கள் அந்த லாரி டிரைவரிடம் விசாரித்தோம். அதில் அவரது பெயர் ஜெகன் பாபு என்பதும் ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி தேவாரப் பள்ளியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை சங்ககிரி அழைத்து வந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஹாரன் அடித்ததால் ஆத்திரம்.. விரட்டிச் சென்று தாக்கிய கொடூரம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!
இதனிடையே இது போன்ற விபத்துக்கள் இனிமேல் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா பகுதிகளான மகுடஞ்சாவடியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் , பேருந்துகள், லாரிகள், மினி ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலை பகல் இரவு என்று 24 மணி நேரமும் தொடர்கிறது. நேற்று அதிகாலை விபத்து நடந்த இடத்தில் லாரியை நிறுத்தாமல் இருந்திருந்தால் விபத்து நிகழாமல் இருந்திருக்கும். விதிகளை மீறி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் கண்டு கொள்வது இல்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இதே பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் வேகமாக வந்த லாரி பேக்கரி ஒன்றில் புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Palladam Murder case: 'தப்பிக்க முயன்றதால் சுட வேண்டிய கட்டாயம்' - பல்லடம் டிஎஸ்பி சௌமியா தகவல்!