திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்க அலுவலகக் கட்டடத்தில் குடியரசு தினத்தையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அகில இந்திய இளைஞர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாக மாதிரி சட்டப்பேரவை நடத்தப்பட்டது.
இந்த சட்டமன்றத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி சபாநாயகராகவும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இரா. ரவி துணை சபாநாயகராகவும் இருந்து மன்றத்தை வழிநடத்தினர்.
இந்த மாதிரி சட்டமன்றத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்தன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த விடமாட்டோம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் பி.பாண்டி அதனை வழிமொழிந்தார்.