மதுரை மாவட்டம் எல்லீஸ் நகரில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பாக அனைத்து தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அதன் பொதுச்செயலாளர் அல்போன்ஸ் கூறுகையில், “அரசு ஊழியர்களுக்கான 8 மணி நேர பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக்கூடாது.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை அனுமதிக்க மாட்டோம். மேலும், முறை சாரா தொழிலாளர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்றார்.
மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்ட தலைமை அஞ்சலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்கங்களை சார்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்த்னர்.