பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஓடை, குளம், கண்மாய், அணை ஆகிய நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய அணையான பாலாறு-பொருந்தலாறு அணை தற்போது நிரம்பியுள்ளது. அதேபோல, 80 அடி உயரம் கொண்ட மற்றொரு அணையான குதிரையாறு அணை தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மழை பொழிந்துவருவதால் அணைக்கு வினாடிக்கு 800 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அணை உடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் உபரிநீர் மதகுகள் வழியே வெளியேற்றப்படுகிறது. குதிரையாறு கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் - பூஞ்சோலை கிராம மக்கள் அவதி! இந்நிலையில், இன்று (ஜன.15) குதிரையாறு அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லக்கூடிய தரை பாலத்தை அடித்துச் சென்றது. தரைப்பாலம் உடைந்ததால் பூஞ்சோலை கிராம மக்கள் ஆற்றை கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றும் முழுதாக துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் பல இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளன. இதனால், வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடனேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து மழைபெய்து வருவதன் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், தரை பாலத்தை கடந்து செல்பவர்கள் பாதுகாப்பாக செல்லும்படி பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட ஆந்திர பேருந்துகள் விடுவிப்பு