திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்புவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் செய்வதற்கான முடிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள், பரிவாரங்கள் ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார், ஸ்ரீஆண்டாள், கருடஆழ்வார், ஸ்ரீவிஷ்வக்சேனர் ஆகிய சுவாமிகளின் கோபுர விமானங்கள் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டி, புதிய கோபுர கலசங்கள் அமைக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை 25.6.23 அன்று காலை ஆச்சார்ய வரணம், பகவத் அனுக்ஞை, விஷ்வக்சேன ஆராதனம், வாசுதேவ புண்ணியாக வாசனம் சுதர்சன ஹோமம் ஆகிய பூஜைகளுடன் யாக வேள்விகள் பட்டாச்சாரியார்கள் தொடங்கி, நான்கு கால பூஜைகள் பூர்ணாகுதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்களை ஏந்தி கடம்புறப்பாடு நடைபெற்றது. சாமிகளின் கோபுர விமானங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீரை கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி பல்வேறு பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகம் முடித்து தீபாராதனைக்குப் பின்னர் தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சௌந்தர்ராஜ பெருமாள், பரிவாரங்கள் கருடஆழ்வார், சௌந்தரவல்லி தாயார், தும்பிக்கையாழ்வார், தன்வந்திரி பெருமாள், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், கோபாலகிருஷ்ணன், அனுமன், சொர்ணா ஆகர்ஷண பைரவர், விஷ்வக்சேனர், சக்கரத்தாழ்வார் ஆகிய சுவாமிகளின் சந்நிதிக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு பக்தர்களுக்கு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.