திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நீர்த்தேக்கம், அப்பகுதி மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாகும். இதில் ராஜவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையின் காரணமாக குடகனாறு பாசன விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்ப்பாசன வசதியின்றி தவித்து வருகின்றனர். இதனால் இந்தத் தடுப்பணையை அகற்ற வேண்டும் என குடகனாறு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (செப்.27) குடகனாறு பாசனப் பகுதி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் அனுமந்தராயன் கோட்டையில் நடைபெற்றது. இதில் ஆத்தூர் முதல் வேடசந்தூர் வரையிலான பல விவசாயப் பிரதிநிதிகளும் தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நரசிங்கபுரம் ராஜாவாய்க்காலில் மரபுவழி குடகனாறை இடைமறித்துக் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றுவது குறித்தும், முறையான நீர்பங்கீடு பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.