திண்டுக்கல்:கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இந்நிலையில், யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். தொடர்ந்து கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்டு யானைகள் புகுந்து கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி இருந்தது.
இதனால், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வியாபாரிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே, கடைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் பேரிஜம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததை தொடர்ந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க சுற்றுலா இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மோயர் சதுக்கம் பகுதியில் காட்டு யானை கடை ஒன்றை சேதப்படுத்தி உள்ளது. இதனால், அப்பகுதியில் கடை வைத்து இருக்கும் நபர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, யானை கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.