வட்டக்கானல் சோதனைச் சாவடியில் காவலர்கள் இல்லாததால் அதிருப்தி - தேசிய புலனாய்வு அமைப்பு
திண்டுக்கல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்க திட்டமிட்டிருந்த கொடைக்கானல் வட்டக்கானல் சோதனை சாவடியில் காவலர்கள் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கொடைக்கானலில் வெளிநாட்டவர் அதிகம் விரும்பும் பகுதியாக வட்டக்கானல் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு அதிகமாக இஸ்ரேல் நாட்டவர் வருகை தருவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு அமைப்பு கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் முகாமிட்டு பயிற்சி எடுப்பதாக தெரிவித்திருந்தனர்.
மேலும் அவர்கள் முக்கிய தலைவர்கள், அரசியல் தலைவர்கள், இந்து அமைப்பு தலைவர்கள் போன்றோரை தாக்க இருப்பதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் தாக்க திட்டமிட்டிருந்த பகுதியான வட்டக்கானல் பகுதியில் கண்காணிக்க சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இந்த பகுதிக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணித்து அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், கரோனா ஊரடங்குக்கு பிறகு சோதனைச்சாவடி செயல்படாமல் இருப்பதாகவும் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து காணப்படுவதாகவும் காவலர்கள் இருப்பதில்லை என இப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். எனவே வட்டக்கானல் சோதனைச் சாவடியில் கூடுதல் காவலர்கள் நியமித்து சோதனையில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.