திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது.
ஊட்டி, ஏற்காடு பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால், சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகிறார்கள்.
குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் இங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 307 வணிக கட்டடங்களை சிறப்பு நிலை நகராட்சி நிர்வாகம் பூட்டி சீல் வைத்தது. இதன் காரணமாக அதிக அளவில் தங்கும் விடுதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்தி அனுமதி இல்லாத காட்டேஜ்கள் புற்றீசல் போல் முளைத்து உள்ளன.
கொள்ளை லாபம்
இந்த தங்கும் விடுதிகள், அரசு அனுமதியற்ற காட்டேஜ்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஒட்டி கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. சாதாரண தங்கும் அறைக்கு 3,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஒரு நாள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர்.
அரசு நடவடிக்கை
அனுமதியற்ற காட்டேஜ்கள், அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சுற்றுலாப் பயணிகளுக்கு தங்க போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, அனுமதியற்ற தங்கும் விடுதிகள், காட்டேஜ்களால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைப்பதில்லை.
இதையும் படிங்க:இயல், இசை, நாடக மன்றத் தலைவராக வாகை சந்திரசேகர் தேர்வு!