திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த நான்கு மாதங்களாகத் திறக்கப்படாமல் இருந்த வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயின்ட், குணா குகை, தூண்பாறை, பைன் மரக்காடுகள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கரோனா எதிரொலியின் காரணமாக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கரோனா பரவல் குறைந்துவந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
எனினும், சுற்றுலா இடங்களுக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடையானது நீடித்திருந்தது. பல்வேறு கட்ட தளர்வுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் மெல்ல சுற்றுலா இடங்களுக்கு வரத்தொடங்கினர். ஆனால், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியச் சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், திறந்தவெளி சுற்றுலா இடங்களை மட்டுமே கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
படகு குழாம்கள், பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்றுமுதல் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், குணா குகை, தூண்பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படும் என வனத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.