திண்டுக்கல்: பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் கானா குமார் (40). இவர், சுற்றுலாவிற்காக தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் தங்கியுள்ளார். நேற்று (ஜூலை 30) மாலை குடும்பத்தினருடன் ஏரி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் திண்பண்டங்கள் வாங்குவதற்காக சாலையை கடந்துள்ளார்.
சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த கொடைக்கானல் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த கலைராஜன் (23) குமார் மீது இருசக்கர வாகனத்தை மோதினார். இதில், சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிய இளைஞர் படுகாயமடைந்தார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் காவல் துறையினர், குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், ஏரி சாலை பகுதியில் தள்ளு வண்டி கடைகள் அதிகமாக உள்ளதால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. எனவே, கொடைக்கானல் ஏரி பகுதியில் இயங்கிவரும் தள்ளுவண்டி கடைகளை நகராட்சி அலுவலர்கள் முறைப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: பைக் விபத்தில் சிக்கிய இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு