தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைன் வகுப்பால் கல்வியைத் தொலைத்த பழங்குடி மாணவர்கள்- பெற்றோர் வேதனை

By

Published : Jul 10, 2021, 9:01 AM IST

ஆன்லைன் வகுப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போன், இணையதள சேவை இல்லாததால் கல்வியை தொடர முடியாமல் பழங்குடியின மாணவர்கள் தவித்து வருவதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

வ்
ஆன்லைன் வகுப்பால் கல்வியை தொலைத்த மாணவர்கள்

திண்டுக்கல்:உலகம் முழுக்க கரோனா பரவ தொடங்கிய சில நாள்களிலேயே பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன.

கரோனா முதல் அலையில் மூடப்பட்ட பள்ளிகளில் ஒரு சில பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமலேயே இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே தங்களுடைய கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மேலும் ஒரு வருடம் மட்டும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வருகிறது.

இதனால், ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே மாணவர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள். ஆனால், இது மலைப் பகுதிகளில் சாத்தியமில்லாததாக இருக்கிறது.

குறிப்பாக கொடைக்கானலை பொருத்தவரையில் கொடைக்கானல் நகர், மேல்மலை, கீழ்மலை கிராமங்கள் என 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இதில் 77 பழங்குடியின கிராம மக்களும் கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

இணையதள சேவையின்றி தவிக்கும் மாணவர்கள்

கடந்த இரண்டு வருடங்களாகவே தனியார், அரசுப் பள்ளிகள் செயல்படாத நிலையில் கல்வியை விட்டுவிட்டு தோட்டத்து வேலைக்கும் கூலி வேலைகளுக்கும் மாணவர்களை அனுப்பக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் தொலைத்தொடர்பு பிரச்னைகள் கடந்த பலவருடங்களாகவே இருந்து வருகிறது. தற்போது இந்த ஆன்லைன் வகுப்பிற்கு இணையதள சேவை முக்கியமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் இணையதள சேவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், தங்களுடைய ஆன்லைன் வகுப்புகள் பள்ளிகளிலிருந்து நடைபெற்றாலும் அதனை கவனிக்க முடியாத சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

மலை கிராம மாணவர்களின் கல்வி நிலை

இதுமட்டுமல்லாது பழங்குடியின கிராம மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மட்டும்தான் அவர்கள் பள்ளிகளுக்கும் அங்கன்வாடிகளுக்குச் சென்று வருகிறார்கள். தற்போது ஆன்லைன் வகுப்புகள் என்னவென்றே தெரியாத நிலையில் தவித்து வருகிறார்கள்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்பிக்கும்போது அவர்கள் இதனை விட்டுவிட்டு இணையதள விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனை பல பெற்றோர் கவனிக்காததால் அவர்கள் கல்வியைத் தொடர்வதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

இது குறித்து மலை கிராம மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “கல்வியை தொலைத்து இருக்கக்கூடிய மாணவர்கள் இங்கு இருக்கக் கூடிய கூலி வேலைகளுக்கும், தோட்டத்து வேலைகளுக்கும் செல்லக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது கவலையாகவுள்ளது.

கல்வியின்றி தவிக்கும் பழங்குடியின மாணவர்கள்

மாணவிகளைப் பொறுத்த வரையில் அவர்களை தனியாக வீட்டில் விட்டுச் சென்றால் பல்வேறு இன்னல்களுக்கு தள்ளப்படுவார்கள், இதனாலேயே சிறுவயதில் குழந்தை திருமணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே கல்வியை தொலைத்த மாணவர்களுக்கு உகந்த முறையில் கல்வியை திரும்பதர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: உரிய காலத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை: முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details