திண்டுக்கல்: தென்காசியைச் சேர்ந்தவர்கள், அய்யாதுரை - லதா மகேஷ்வரி தம்பதி. இவர்களுக்கு சூர்யா (30) என்ற மகன் இருந்தார். அவர் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் ஃபிலிம் டெக்னாலஜி படித்துள்ளார். மேலும் அவர் மியூசிக் கம்போஸ் செய்து, ஆன்லைன் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பி வந்துள்ளார்.
சூர்யாவும் சென்னையைச் சேர்ந்த சுவேதா (25) என்பவரும், கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஒன்றாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்பு பிரிந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து காட்டேஜ் கட்டுவதற்கு இடம் பார்ப்பதற்காக, கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கொடைக்கானலுக்குச் சென்ற சூர்யா, கல்லுக்குழியில் உள்ள மலோனி குடிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கொடைக்கானலில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுவேதா, நவம்பர் 30அன்று சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்து, சூர்யாவை சந்தித்து உள்ளார். அன்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சூர்யா தன்னை தாக்கியதாக தனது கொடைக்கானல் நண்பர்களிடம் சுவேதா தொலைபேசியில் கூறியதாக கூறப்படுகிறது.
சுவேதா அளித்த தகவலின் பேரில், சூர்யா தங்கி இருந்த வீட்டிற்குச் சென்ற சுவேதாவின் நண்பர்கள், அங்கு காயமடைந்த நிலையில் கீழே கிடந்த சூர்யாவை, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சூர்யாவை சோதித்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாகக் கூறி உள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்ற கொடைக்கானல் காவல்துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூர்யாவின் தந்தை அளித்த புகார் மனு இந்நிலையில், சூர்யாவின் தந்தை அய்யாதுரை கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், “எனது மகன் சூர்யா இறந்துவிட்டதாக டிசம்பர் 1 காலை கேள்விப்பட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவனைக்குச் சென்றேன். அங்கு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சூர்யாவின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்தன.
இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, சூர்யாவுக்கும் சுவேதாவுக்கும் கடந்த 30ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாகவும், அதனை சுவாதியின் நண்பர்களான கௌதம், சோழா, சுபாஷ், அகில் ஆகியோர் தடுக்க முயன்ற போது, படிக்கட்டில் இருந்து சூர்யா விழுந்து காயம் ஏற்பட்டு இறந்ததாகவும் தெரிவித்தனர். சூர்யாவின் இறப்பில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே, எனது மகன் இறப்பில் சம்பந்தப்பட்டோரை விசாரித்து, தக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, சுவேதாவின் நண்பர்கள் தாக்கியதால் சூர்யா இறந்தாரா அல்லது சுவேதா உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தடுமாறி கீழே விழுந்து இறந்தாரா போன்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் சென்று சுவேதா மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: காதலியுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த இளைஞர்