மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கிறது. பசுமை நிறைந்த பகுதியாகக் காணப்படும் கொடைக்கானல் பச்சை புல்வெளி போர்த்தி மக்கள் ரசித்து வாழும் இடமாக இருக்கிறது. கொடைக்கானலில் ஏப்ரல் மாதம் தொடங்கும் முதல் கட்ட சீசன் மே, ஜூன் மாதம் நிறைவடையும்
இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். மேலும், ஒவ்வொரு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது சீசன் தொடங்கி டிசம்பர் மாதம்வரை நீடிக்கும்.
தற்போது, இரண்டாவது சீசனில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக செட்டியார் பூங்கா, ஏரிச்சாலை, செண்பகனூர் உள்ளிட்ட இடங்களில் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் பைன் செட்டியா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரு வாரங்களாக கடும் மழை பெய்துவந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி கொடைக்கானல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
தற்போது, மழை குறைந்துவிட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், அழகு அழகாய் பூத்துக் குலுங்கும் பைன் செட்டியா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்துவருகிறது. இதனைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் வந்துசெல்கின்றனர்.