திண்டுக்கல்:கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இவற்றை காண்பதற்கு தனித்தனியாக கட்டணம் செலுத்தி இந்த இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் மிகவும் அழகிய சுற்றுலா இடமாக 'தூண் பாறை' திகழ்கிறது. இந்தத் தூண் பாறையினை பல நேரங்களில் மேகமூட்டம் மூடி மறைத்துவிடும்.
வழக்கமாக சாலையில் செல்லும்பொழுதே தூண்பாறை தெரிகிறதா இல்லையா என்று சுற்றுலாப்பயணிகள் பார்க்கும் அளவிற்கு வேலி மட்டும் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வேலியை அகற்றி வனத்துறையினர் மிகப் பிரமாண்டமான மதில் சுவரை எழுப்பி வருகின்றனர். இந்த மதில் சுவர் எழுப்பி முடிக்கப்பட்ட பின்னர் தூண் பாறையை சாலையில் இருந்து காண முடியாத நிலை ஏற்படும்.
கட்டாயமாக கட்டணம் செலுத்திய பின்னர் தான் இந்தப் பெரிய மதில்சுவரைத்தாண்டி உள்ளே சென்று ’தூண்பாறை’ தெரிகிறதா இல்லையா என்று பார்க்க முடியும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தூண் பாறை மேகமூட்டம் இல்லாமல் இருக்கும்; அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் தூண்பாறையைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பிரமாண்ட மதில்சுவரை அகற்ற வேண்டும், இல்லை எனில் குறைவான உயரத்தில் மதில் சுவரை அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.