திண்டுக்கல்:புரெவி புயல் எதிரொலியாக கொடைக்கானலில் அனைத்துவிதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சார் ஆட்சியர் கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. இச்சூழலில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் செய்தியாளர்களிடத்தில் பேசினார். அதில், “கொடைக்கானல், வத்தலகுண்டு சாலை, டம்டம் பாறை, பழனி சாலை, சவரிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக, ஆபத்தான நிலச்சரிவுகள் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இதனைக் கண்காணிக்க இரண்டு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியோருக்கு எந்த நேரமும் தகவல் பரிமாற வாக்கி-டாக்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் பேட்டி தொடர்ந்து பேசிய அவர், மலைப் பகுதிகளில் மின்சார கம்பங்கள் முறிந்தால், மாற்று மின்கம்பங்கள் போதிய அளவில் இருப்பதாகவும், பேரிடர் காலங்களில் பொதுமக்களைத் தங்கவைக்க சமுதாய கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் கொடைக்கானல் மலைச்சாலையில் 13 கனரக இயந்திரங்கள், முறிந்த விழும் மரங்களை அகற்றவும், மண்சரிவு ஏற்பட்டால் அகற்றவும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.