மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், உலக சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமாக கலையரங்கம் பகுதி அமைந்துள்ளது. இங்கு உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் சாலையில் வெளியேறுவதாக எழுந்த புகாரின்பேரில் சாலை ஓரத்தில் கழிவுகள் வெளியேற குழாய்கள் அமைக்கப்பட்டன.
வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் அவலம் தொடர் மழையின் காரணமாக கடந்த வாரம் கலையரங்கம் பகுதியில் அமைந்துள்ள கழிப்பறை கழிவுகளும், உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளும் சேர்ந்து சாலையில் தேங்கியது. இதனை கொடைக்கானல் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மனித கழிவுகளுடன் சேர்ந்து மழையில் அடித்துவரப்பட்ட கழிவுகளை எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் அகற்றினர்.
மேலும், கழிவுகள் சாலையில் செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுகள் நேரடியாக கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கலப்பதால் ஏரி நாளுக்கு நாள் மோசமாக மாசடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கியவரின் 200ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!