தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாசடைந்த கொடைக்கானல் ஏரி : உரிய நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? - கொடைக்கானலில் மாசடைந்த ஏரி

திண்டுக்கல் : கொடைக்கான‌ல்‌ ஏரியில் மித‌க்கும் க‌ழிவுக‌ளால் ஏரியிலிருந்து துர்நாற்ற‌ம் வீசுவ‌துட‌ன், நீர் மாசுபாடு அதிகரித்து, சுற்றுலாப் ப‌ய‌ணிகளும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

Lake pollution
Lake pollution

By

Published : Oct 10, 2020, 10:11 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மத்தியில் மிகப்பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வது வழ‌க்க‌ம்.

இந்த ஏரியைச் சுற்றியுள்ள சாலையில், ஏரியின் அழகை ரசித்தவாறே நடைப்பயிற்சி செய்வது, சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்வது என சுற்றுலாப் பயணிகள் அனைத்துவித பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் லயித்து மகிழ்வார்கள். மேலும், ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், பழனி மக்களுக்கு குடிநீராகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், க‌ரோனா பொது முடக்கத்தைத் தொடர்ந்து,‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வருகையின்றி இந்த பகுதி வெறிச்சோடி காணப‌ட்ட‌து. தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக தற்போது அதிகரித்து வருகிறது.

இருப்பினும், தற்போது பூங்காக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஏரியில் ப‌ட‌கு சவாரிக்கு த‌டை தொடர்ந்து நீடித்து வ‌ருகிற‌து. இந்நிலையில் தற்போது ஏரி முழுவதிலும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கலந்து வருகின்றன. இதனால் ஏரி மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறது. மேலும் ஏரியிலிருந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது.

மாசடைந்து காணப்படும் கொடைக்கானல் ஏரி

இதனால் கொடைக்கான‌லுக்கு வ‌ரும் சுற்றுலாப் ப‌ய‌ணிகள் முக‌ம் சுழிக்கும் நிலையும், அவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏரியின் ஓரங்களில் புற்கள், புதர்கள் மண்டி காணப்படுவதால் அதன் அழகும் சீரழிந்து வருகிறது.

இந்நிலையில், கடுமையாக மாசடைந்துள்ள கொடைக்கானல் ஏரியைத் தூய்மைப்படுத்த தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details