திண்டுக்கல்: கொடைக்கானலில் பலா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி செய்ய அரசு உதவ வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ்மலை கிராமங்களான பேத்துபாறை, அஞ்சுவீடு, தாண்டிகுடி, பண்ணைகாடு, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. காப்பி, பின்ஸ், அவரை, கேரட், உருளைக்கிழங்கு, அவக்கோடா உள்ளிட்ட பல்வேறு காய்கறி, பழ வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருள்கள் அனைத்தும் தமிழ்நாடு உள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இச்சூழலில், தற்போது கீழ்மலை பகுதிகளில் பலா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒரு பழம் ரூ. 50 முதல் 60 வரை மட்டுமே விற்பனையாவதாகவும், இந்த பழங்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதனால் பழங்களை மரத்திலேயே விட்டு விடுவதாகவும், பழங்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், கொடைக்கானலுக்கு வரும் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் மட்டும் பழங்களை வாங்கிச் செல்வதாகவும், பலா பழங்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய தமிழ்நாடு அரசு உதவ வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.