திண்டுக்கல்:கூடடைந்து கிடக்கும் குஞ்சுகளைக் கொஞ்சியபடி உணவூட்டும் சிவப்பு மீசை சின்னான், புல் தரையில் பூச்சிகளைக் இனம் கண்டு வேட்டையாடும் கொண்டலாத்தி, காற்றில் மிதந்தபடி தலைகீழாகத் தொங்கும் தேனுறுஞ்சும் சிட்டு, சுற்றுச்சுவர் கச்சேரியின் இடையே திடீரென பறந்து வேடிக்கை காட்டும் அடைக்கலங்குருவிகள், மனித பயமற்று எளிதில் காணக்கிடைக்கும் மலைச்சிட்டுக் குருவி என கொடைக்கானல்வாசிகளின் தினப் பொழுதுகளை ரசனைக்குள்ளாக்கி வருகிறன புள்ளினங்காள்.
கன்னியாக்குமரி - சென்னை ரயில் தடத்தில், மதுரை திண்டுக்கல் வழிப்பாதையில் உள்ள கொடைரோட்டிலிருந்து 80 கி.மீ., தொலைவில் இருக்கிறது கொடைக்கானல் மலை. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த மலை, தென்தமிழ்நாட்டின் சிறந்த கோடை வாசஸ்தலமாக விளங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி காடுகளைக் கொண்டுள்ளது இந்த மலையின் தனிச் சிறப்புகளில் ஒன்று.
சங்க காலத்தில் கோடை மலை என அழைக்கப்பட்ட இந்த மலையை, 1821ஆம் ஆண்டு நில ஆய்வு செய்த லெப்டினன்ட் பி.எஸ். வார்டு என்பவர் ஆங்கிலேயர்கள் வாழ்வதற்கான ஆக சிறந்த இடமாக இம்மலையை அறிவித்தார் என காலனியாதிக்க இந்திய வரலாறு கூறுகின்றன. இருந்தபோதிலும் கூன்பாண்டியன் காலத்து கோயில் ஒன்றைத் தன்னுள் கொண்டு, தன் வரலாற்று பெருமையை உலகறியச் செய்கிறது பளியர்களின் இந்த ஆதி பூமி.
அதிகரித்திருக்கும் வன அடர்த்தி
ஆண்டு முழுவதும் கொடைக்கானலில் இதமான காலநிலை நிலவுவதால் அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறது இந்த மலை. பளியர்களின் பூமியாகவும், பின்னர் ஆங்கிலேயர்களின் வசிப்பிடமாகவும் இருந்த வரையில் இயற்கை வனப்பை இழக்காக மலைகளின் இளவரசி, அதன் பின்பு ஏற்பட்ட சாலை வசதிகளின் பெருக்கத்தால் பிரமலமான சுற்றுலாத் தலமாக மாறியது. இதனால் அதிகரித்த மக்கள் நடமாட்டம், வாகனப்புகை அதிகரிப்பு ஆகிய மெல்ல தன் வனப்பை இழந்து வந்தது.
உலகம் முழுவதும் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வரும் பெருந்தொற்று ஊரடங்கு பலரின் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. சிலருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருந்து வரும் ஊரடங்கு, கொடைக்கானலுக்கு தன் பழைய வனப்பை மீட்டு தர உதவி உள்ளது.
கரோனா பெருந்தொற்றுக் காரணமாக, 2020 மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. சமவெளிப்பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல இன்னும் அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் சுற்றுலா தலமான கொடைக்கானல் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அமைதியின் காரணமாக, கடந்த பத்து ஆண்டுகளாக அடர்வனங்களுக்குள் பதுங்கி வாழ்ந்த பறவையினங்கள் இப்போது மெல்ல வெளியே தலைகாட்டத் தொடங்கியுள்ளன.