திண்டுக்கல்:கொடைக்கானலில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ராஜா தலைமையில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த குழு, கொடைக்கானல் அரசு மருத்துவமனை, கொடைக்கானல் ஏரி, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, கொடைக்கானல் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
மேலும், தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (TAHDCO)) பயனாளிகளிடம் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், காதர்பாட்சா, கிருஷ்ணசாமி, தமிழரசி, தளபதி, நாகை மாலி, நிவேதா முருகன், மனோகரன், ஜெயக்குமார் ஆகியோர் பங்குபெற்றனர்.
பின்னர் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ராஜா கூறியதாவது, "கொடைக்கானலில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தோம். குறிப்பிட்ட சில மருந்துகள் தனியாரிடமிருந்து கூட பெற்று நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகிறது. மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் ஏரி மாசுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் பெண்கள் விடுதி மிக மோசமான நிலையில் உள்ளது. 1996-ல் இந்த கட்டடம் கட்டப்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதை புதுப்பிப்பதற்கு 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்தப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.