திண்டுக்கல்: தேனி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விடுதலை பட்டி என்ற கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரும் இவரது மனைவியும் தனியார் நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். இவர் சைட் பிஸ்னஸாக தேனி பகுதியில் கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதியில் நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியானது காவல்துறையினருக்கு ரகசியமாக தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணி செய்து வந்த தனிப்பிரிவு காவலர் மற்றும் காவல்நிலைய எழுத்தாளர் குற்றவாளியைக் கைது செய்து அழைத்து வர விரைந்துள்ளார். அப்போது குற்றவாளியிடம் 15-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க அவரை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்கள்.
சரியாக அரவக்குறிச்சி தாலுகா மஞ்சு வெள்ளி ஊராட்சி கடம்பன்குறிச்சி மற்றும் எல்லப்பட்டி என்ற இடத்தில் அவர்களது வாகனம் வந்துகொண்டிருந்தபோது திடீரென கஞ்சா வியாபாரி பொன்னுசாமி இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயற்சித்தார். அதே சமயத்தில் அந்த வழியாக தனியார் நூல் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் மோதியதில் கஞ்சா வியாபாரி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.