திண்டுக்கல்:வேடசந்தூர் அருகே நாகம்பட்டி ஊராட்சி சேனன் கோட்டையில் புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கலந்து கொண்டு, பூமி பூஜையைத் துவக்கி வைத்தார். அதன் பின்னர் பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “அகமதாபாத்தில் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியம் தற்போது நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆகிவிட்டது. இப்போது நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத இந்திய அணி, பிரதமர் நரேந்திர மோடி பார்க்கச் சென்றவுடன் தோற்றுப் போய்விட்டது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதுதான் பாஜகவின் இன்றைய நிலைமை. பாஜக தமிழகத்தில் மட்டுமல்லாமல், மத்திய அளவிலும் எந்த காலத்திலும் இனி ஆட்சி அமைக்காது.
இந்தியா கூட்டணிதான் ஆட்சி: ஒரு கடுமையான மக்கள் விரோத ஊழல் அரசாங்கத்தை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இதன் முடிவு ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வரும். 5 மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
நோட்டாவுடன்தான் போட்டி:100 நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் 30 கோடி பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 12 வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. கடுமையாக போராடி சம்பளம் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் 1,200 ரூபாய் ஆகி விட்டது.