திண்டுக்கல்:கரூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கனகராஜ். கடந்த திங்கட்கிழமை (நவ.22) வெங்கல்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த வேனை கனகராஜ் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் விபத்தை ஏற்படுத்தியது திருச்சி மாவட்டம் தோகைமலையை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று (நவ.24) திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லலிதா ராணி முன்னிலையில் சரணடைந்தார்.