திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வந்திருந்தார். அங்கு அவர் மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியையடுத்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்தபோது,
சிலைக்கடத்தல் வழக்கில் தமிழ்நாடு அரசு மீதான பொன்.மாணிக்கவேலின் குற்றச்சாட்டு தொடர்பாக அரசுதான் விளக்கம் தர வேண்டும். நீதிமன்றம் தலையிட்டு பொன்.மாணிக்கவேலுக்கு அரசு ஒத்துழைப்பு தருவதை உறுதி செய்ய வேண்டும். பழனி மலைக்கோயில் சிலை தொடர்பாக மக்கள் மத்தியில் நீண்டநாட்களாக சந்தேகம் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறநிலையத்துறை விளக்கமளிக்க வேண்டும். விளக்கமளிக்காவிட்டால் இதுபோன்ற வாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் இந்த தேர்தல் நடந்து முடிந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற வேலூர் மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே இது குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் என தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருகிறது என குறிப்பிட்ட அவர் தற்போது உள்ள மாநில அரசுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என சாடினார்.
காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சவாலான சூழல் ஏற்பட்டுள்ள சமயத்தில் சோனியா காந்தி தலைமை பதவியை ஏற்றிருப்பது தான் உகந்த செயல். மாநில உரிமைகளை பறித்து, முரட்டு பலத்துடன் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக அரசு 144 தடை, தகவல்தொடர்பு துண்டிப்பு, பக்ரீத் கொண்டாட முடியாத நிலை என காஷ்மீரில் இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை மத்திய அரசு நெறித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.