திண்டுக்கல்: திண்டுக்கல் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் நேற்று (ஆக. 16) பேசுகையில், "ஆண்டுதோறும் பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டம் உள்ளது என பொய் கூறி வருகிறார். இதேபோன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தருவதாக கூறினார். ஆனால் அது யாருக்கும் கிடைக்கவில்லை.
ஆப்கான், பெகாசஸ்...
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபன் படை பிடித்துள்ளது, இது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானதாகும். இது பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும். எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் தொடர்புடைய தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய கேடாகும்.
நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்கள் கூச்சல் எழுப்புவதற்கு காரணமே பிரதமர் சரியான பதில் கூறாததுதான். அதிமுக உதவியுடன் எல்ஐசி உள்பட பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆவதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மக்களிடம் அதிமுக பதில் சொல்லியாக வேண்டும்.