திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியில் அமைந்துள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டானது காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை 5 சுற்றுகளாக நடைபெற்றன. இதில் பங்கேற்க திருச்சி, மதுரை, மணப்பாறை, சிவகங்கை, தேனி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து காளைகளும் மாடுபிடி வீரர்களும் வருகை தந்தனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகே காளைகளும் மாடுபிடிவீரர்களும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். முதலில் ஊர் வழக்கப்படி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை போட்டி போட்டு வீரர்கள் பிடித்தனர்.
வெற்றிபெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் தங்க, வெள்ளி காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கபட்டது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தப் போட்டியை காண சுற்று வட்டாரப்பகுதியிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.