பாரம்பரிய நெல் ரகங்களைக் காக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார்.
அவர் உயிரிழப்பதற்கு முன்பு வரை கிட்டத்தட்ட 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்தார். இதனால் தான் அவருக்கு நெல் ஜெயராமன் என்ற பெயர் வந்தது.
அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று (டிச.6) கொடைக்கானலில் பாரம்பரிய நெல் விதைகள் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி இயற்கை நல அறக்கட்டளையின் தொடக்க விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு அறக்கட்டளையின் தலைவர் பாலமுருகன் தலைமையேற்றார். ராமலிங்கம், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமனுக்கு, பாரம்பரிய நெல் விதைகளை கொண்டு அறக்கட்டளையினர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளையின் தலைவர் பாலமுருகன், “எங்களது அறக்கட்டளையின் சார்பில் இயற்கையை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம், புவி வெப்பமயமாவதைத் தடுப்பதற்கானப் பணிகள் தான் எங்களது முதற்பணி.
பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்கும் பணியினையும் தொடர்ந்து செய்ய உள்ளோம். ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பது எங்களது குறிக்கோள்”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,” கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், இழுப்பபூ சம்பா, சீரகச்சம்பா, வெள்ளை பொன்னி, தூயமல்லி, குள்ளகார், பூங்கா, குடவாழை உள்ளிட்ட ரக பாரம்பரிய நெற்பயிர்கள் அதிகம் தமிழ்நாட்டு மக்களால் விரும்பப்படுவதால், அவை பயிரிடப்படுகின்றன. இதேப் போல மற்ற பாரம்பரிய நெல் பயிர்கள் பயிரிடுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்.
எங்களது அமைப்பின் சார்பில் பாரம்பரிய நெல்லில் உள்ள மருத்துவகுணம் பற்றிய அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இயற்கை விவசாயத்தை செய்வதற்கு அரசு ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பாரம்பரிய அரிசி ஆய்வு மையம் அமைக்க வேண்டும். சத்துணவு மையங்களில் பாரம்பரிய அரிசி உணவு வழங்க வேண்டும்”என்றார்.
நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி! இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயற்கையை மீட்டெடுப்பதற்கு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.