திண்டுக்கல்: நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 45), கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் மாறிச்செல்வம்(14), கவிவரதன் (11), பிரநிஷா (5) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டில் கட்டிட வேலைக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஈராக் நாட்டில் இருக்கும் சின்னையா தனது மனைவியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அவர் பேசும் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அன்று சின்னையா தற்கொலை செய்து கொண்டதாக அங்கு பணிபுரிபவர்கள் கோகிலாவிற்குத் தகவல் கூறியுள்ளனர். அதையடுத்து தனது கணவர் உடலை ஈராக் நாட்டிலிருந்து மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என நத்தம் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் மூன்று முறை கோகிலா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி இது தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுத்து உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே இறந்த சின்னையா தான் இறப்பதற்கு முன் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு அவர் பேசிய காணொளியை அனுப்பி உள்ளார்.