திண்டுக்கல்:நத்தம் முதல், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வரையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.100 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஒப்பந்தப் பணிகளை மதுரையைச் சேர்ந்த ஆர்.ஆர்.இன்பரா என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சாலை அமைக்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, நத்தம் அடுத்துள்ள கோசுகுறிச்சி பகுதியில் தற்காலிக அலுவலகம் மற்றும் பொருள்கள் இருப்பு வைக்கும் கிடங்கியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கோசுகுறிச்சியிலுள்ள ஆர்.ஆர்.இன்பரா நிறுவனத்தின் தற்காலிக அலுவலகத்தில் சோதனையிடுவதற்காக காலை 8 மணிக்கு வந்தனர். அந்த அலுவலகத்தின் மூலமாக, சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான கணக்கு விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.